×

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடல், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இன்று ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அமாவாசை மாதந்தோறும் வருகிறது. ஆனாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை பிரசித்தி பெற்றது. அமாவாசையன்று நீர்நிலைகளில் நீராடி, தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இதனால் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஆடி 1ம் தேதியான இன்றும்(17ம் தேதி), ஆடி 31ம் தேதியான ஆகஸ்ட் 16ம் தேதியும் அமாவாசை வருகிறது. ஒரே மாதத்தில் 2 அமாவாசை வரும் மாதம் மலமாதம் என கூறப்படுகிறது. முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடிப்பது மிக விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம். தமிழ் பஞ்சாங்கத்தில் 2 நாட்களிலுமே வரக்கூடிய அமாவாசை சர்வ அமாவாசை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இரண்டு அமாவாசை நாட்களிலும் பித்ரு தர்ப்பணம் தரலாம்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில், ஆடித்திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் சுவாமிக்கு தினசரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் 5ம் நாளான இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சன்னதியில் ஸ்படிக லிங்க பூஜையும், கால பூஜையும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடற்கரையில் தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். காலை 10 மணியளவில் ராமர், சீதா, லெட்சுமணன் ஆகியோர் அனுமனுடன் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்தக்கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். தீர்த்தக் கடலில் குளித்த பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து பிரகாரத்தில் பல மணி நேரம் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்தனர்.

சதுரகிரி: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாள் என மாதந்தோறும் 8 நாட்கள் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆடி அமாவாசையையொட்டி இன்று கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையையொட்டி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் என பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். டெல்டா: ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்சி ரங்கம் அம்மா மண்டபம், வேதாரண்யம் கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். இதேபோல் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை, பவானி கூடுதுறை, மேட்டூர், ஒகேனக்கல், இடைப்பாடி காவிரியில் தங்களின் முன்னோர்களுக்கு பொதுமக்கள் இன்று தர்ப்பணம் கொடுத்தனர்.

The post ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Rameswaram Agni ,Audi ,New Moon ,Chennai ,Rameswaram ,Agni ,Sea ,Kannyakumari ,Triveni ,Sangham ,
× RELATED பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம்